Caste Hierarchy & TN's New Cabinet?

 



தமிழக அமைச்சரவை பட்டியல் சாதிய படிநிலைகளை மறக்காமல், சரியாக எடுத்துச்சொல்கிறதோ?


உள்ளது உள்ளபடி!




பொய்யுரை, புகழுரை வேண்டாம்! 

1

முத்துவேல் கருணாநிதி #ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தின்  ‘மாண்புமிகு’ (8வது) முதல்வராக பதவியேற்று உள்ளார். அவருக்கு நமது நெஞ்சார்ந்த வாழ்த்துகள். புதிய முதல்வர் ஸ்டாலினுக்கு நாம் கூறும் வாழ்த்து என்பது சம்பிரதாயமானதல்ல.

  

‘தேசிய போர்வாள்’ எச். ராஜாவில் ஆரம்பித்து, தன்னை ‘ஆர்த்தோடாக்ஸ் அம்பி’ என்று பிதற்றிக்கொள்ளும் எஸ்.வி. சேகர் உட்பட அ.தி.மு.க., பெருந்தலைகள் மற்றும் பல நடுநிலை(???) பத்திரிகைகள், ‘ஸ்டாலின் மட்டுமல்ல கருணாநிதி குடும்பத்தில் இனி யாருக்குமே முதல்வராகின்ற வாய்ப்பேயில்லை’, என்று ‘கட்டம்’ காட்டியும்; கட்டம் கட்டியும், கட்டியம் கூறிவந்த நிலையில் பலரது சாபங்கள், வயிற்றெரிச்சலையும் மீறி, மக்களின் ஆதரவோடு நேற்று (7/05/2021) தமிழக முதல்வராக பதவியேற்றிருக்கிறார் #ஸ்டாலின். அந்தவகையில் பெரிய எதிர்ப்பும், மிகுந்த எதிர்பார்ப்பும், பெருத்த சதிகளையும் சாபங்களையும் கடந்து... வென்று நிற்கின்ற நிலை ஸ்டாலினுக்கு. அதனாலேயே பல்லாயிரக்கணக்கான தமிழர்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்பைப் போல நமக்கும் இருக்கும் எதிர்பார்ப்புகளையும் தாங்கிவருவதுதான் இந்த வாழ்த்து.

 

திரு. ஸ்டாலின்,  மாண்புமிகு முதல்வராக, முதல் நாள் கையெழுத்திட்ட ஆணைகள் ஐந்தும் வரவேற்கத்தக்கதே. அதிலும் குறிப்பாக பால் விலை குறைப்பு மற்றும் கரோனா தொடர்பான உதவிகரமான செய்திகள் அனைத்தும் இந்த இக்கட்டான காலகட்டத்தில் மக்கள் மனதில் இனிப்பாய் தங்கி நிற்கும். #வாழ்த்துகள் முதல்வரே!




அமைச்சரவை பட்டியல் சாதிய படிநிலைகளை மறக்காமல், சரியாக எடுத்துச்சொல்கிறதோ?


மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களே! உங்களோடு பதவியேற்றுக்கொண்ட அமைச்சர் பெருமக்களின் எண்ணிக்கை,  தங்களையும் சேர்த்து, 34. அரசு வெளியிட்டுள்ள அந்த பட்டியலை நாம் பத்திரிகைகள் வாயிலாக பார்த்து தெரிந்துகொண்ட போது, சரியாக 34வது (கடைசி) இடத்தில்தான் ‘ஆதிதிராவிட நலத்துறை’ அமைச்சரின் பெயர் இடம்பெற்றிருக்கிறது. ஆதிதிராவிட நலத்துறை கடைசி இடத்தில்தான் இருக்கவேண்டும் மற்றும் பட்டியலின அமைச்சர்களான சி.வி. கணேசன் (ஆதி திராவிடர்), மா. மதிவேந்தன் (அருந்ததியர்) மற்றும் ஆதிதிராவிட நல அமைச்சர் என். கயல்விழி (தேவேந்திரர்) உட்பட இம்மூவரும் பதவியேற்பில் கூட இறுதியாகவே அழைக்கப்பட்டது எல்லாமே இயல்பாகவே நடந்துதானா?



 

இயல்பாகவே நடக்கிறதா? அல்லது கடந்த ஐம்பது ஆண்டுகளாக தமிழகத்தில் நடந்துகொண்டிருக்கும் திராவிட, பகுத்தறிவு, சாதி ஒழிப்பு, பெரியாரிய அரசியலின் உண்மையான முகம் இதுதானா? இதே வரிசையில்தான், இத்துறைக்கான முக்கியத்துவமும் கொடுக்கப்படுமா? உங்களது நியாயமான , பாரபட்சமற்ற சிந்தனைக்கு இக்கேள்வியை சமர்ப்பிக்கின்றேன்!


மேலும் பத்து அமைச்சகங்களின் பெயர்களை மாற்றம் செய்திருப்பது வரவேற்கத்தக்கதே. ஆனால், நெடுங்காலமாக சர்ச்சைக்குரிய பெயரில் இயங்கிக்கொண்டிருக்கும் “ஆதிதிராவிட நலத்துறை” மட்டும் அப்படியே இயங்குவதில் எவ்வித நியாயமுமில்லை. குறிப்பாக “பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை”, ‘பிற்பட்ட திராவிட நலத்துறை’யாகவோ அல்லது அப்பட்டியலில் உள்ள ஏதோ ஒரே ஒரு சாதியின் பெயரிலோ இல்லாதபோது, பட்டியலினத்தில் இருக்கின்ற எழுபத்தியாறு (76) சாதிகளில் ஒன்றின் பெயரை ஒட்டுமொத்த பட்டியிலனத்திற்கான நலத்துறைக்கு, அமைச்சகத்திற்கு இவ்வளவு காலம் சூட்டியிருப்பதில் என்னவிதமான அரசியல் இருக்கிறது?

 

வேறு எந்த மாநிலத்திலும் “Scheduled Castes” என்பது இவ்வளவு மோசமாக மொழிபெயர்க்கப்படவில்லை. மேலும் பல ஆண்டுகள் தமிழை மைய்யபடுத்திய பல ஆட்சிகளை கண்ட தமிழகத்தில் தமிழ் மொழிபெயர்ப்பில் இவ்வளவு சிக்கலா என்று எண்ணுகிற போது சந்தேகமே வலுக்கிறது. உங்களது தந்தையைவிட தமிழ் அறிந்த தமிழர் யார்? அவரின் புதல்வரான உங்களுக்கு தமிழ் எட்டிக்காயாக இருக்கமுடியாது? தற்போது நீங்கள் தலைமைச் செயலாளராக நியமித்திருக்கும் திரு.#வெ. இறையன்பு இ.ஆ.ப., சர்வ அறிவோடு நல்ல தமிழ் புலமையும் பெற்றவர். அவரிடமே கேளுங்கள், “Scheduled Caste” என்பதின் தமிழாக்கம் என்னவென்று?


உங்களது சுட்டுரை முகப்பு பக்கத்தில் ‘இனி தமிழகம் வெல்லும்” என்ற வாசகம் அடங்கிய படத்தையே வைத்துள்ளீர்கள். அது மெய்யாக வேண்டுமென்றால், நல்ல விசயங்களை நல்லெண்ணத்தோடு ஏற்றுக்கொண்டு, அவைகளை அவ்வண்ணமே செயல்படுத்துவீர்கள் என்று நம்புகிறோம்!


வாழ்த்துகள் மற்றும் நன்றிகளோடு.....

- கலியுகச்சித்தர்,

உயிரோசை.

-

Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Home Ads

Advertisement

Our Videos

Contact Form

Name

Email *

Message *

seemaan

Facebook

Blog Archive

Recent Posts