உள்ளது உள்ளபடி! 2

 பொய்யுரையும் புகழுரையும் வேண்டாம்





நீங்கள் ‘திராவிடராக’வே இருந்துகொள்ளுங்கள் முதல்வர் ஸ்டாலின் அவர்களே!


பதவியேற்றுக்கொண்ட முதல் நாளில் ஐந்து அதிரடி ஆணைகளோடு உங்களது பணிகளை / பயணத்தை தொடங்கியிருக்கும் முதல்வர் அவர்களே! உங்களது சுட்டுரை கணக்கின் முகப்பில் “Belongs to Dravidian Stock”, என்று உங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் நீங்கள், கையெடுத்து கும்பிடும் உங்களது முகப்பு படத்தோடு “இனித் தமிழகம் வெல்லும்”, என்னும் வாசகத்தையும் இடம்பெறச் செய்ததின்மூலம் உங்களிடமிருக்கும் பல முரண்களையும், வன்மங்களையும் வெளிப்படுத்தி உள்ளீர்கள்.



கடந்த 7/05/2021 வெள்ளிக்கிழமை அன்று  தினமணியில், “அன்று அண்ணா... இன்று ஸ்டாலின்”, என்கிற தலைப்பில்  ஒரு கட்டுரை வருகிறது. அதில், ‘பகை மற்றும் பழி உணர்ச்சியில்லாத ஒரு அரசியல்வாதி இருக்கிறாரென்றால் அது நீங்கள்தான்’ என்று மானுட குணத்தின் மகுடத்தை உங்களுக்கு சூட்டியிருக்கிறார் கட்டுரையாளர். நீங்கள் முதல்வர் ஆனபிறகே உங்களிடம் பல நல்ல குணங்கள் இருப்பதாக கண்டுபிடிக்க வேண்டிய நெருக்கடியில் பலர் இருக்கலாம். ஆனால், எது உண்மை, யார் யாருடைய கருத்தெல்லாம் உண்மையானது என்று பகுத்து உணரமுடியாத அளவிற்கு நீங்கள் வெள்ளேந்தியான மனிதராக இருக்கமாட்டீர்கள் என்று நம்புகிறோம்.




உங்களைப் பற்றிய எங்களைப் போன்றவர்களின் புரிதல் இப்படியிருக்க, உங்கள் சுட்டுரை பிரகடனப்படுத்துகிறது நீங்கள் திராவிட இனத்தை சேர்ந்தவரென்று. தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவிற்கோ, ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டிக்கோ, கர்நாடகா முதல்வர் பி எஸ். எடியூரப்பாவிற்கோ, கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கோ இல்லாத ‘திராவிட புரிதல்’ தமிழகத்தின் முதல்வராக பதவியேற்பவர்களுக்கும் மட்டும் தொடர்ந்து இருந்துகொண்டே இருப்பதற்கான காரணம் புரியாமலில்லை. அண்டை மாநிலத்து முதல்வர்கள் எல்லோரும் எப்பொழுதுமே தெலுங்கராக, கன்னடராக, மலையாளியாக மட்டுமே இருக்கிறார்கள். பாவம் அவர்கள்... திராவிட அறிவும், தெளிவும் அற்றவர்களாக இருக்கிறார்கள்.


நீங்கள் திராவிட இனம் தான். சரி... தமிழ் நாட்டில் உங்களுக்கு வாக்களித்தவர்களில் இலட்சக்கணக்கானவர்கள், தமிழை தாய் மொழியாக பேசி, தாங்கள் தமிழ் இனத்தை சேர்ந்தவர்கள் என்றும் நம்பிக்கொண்டிருக்கிறார்களே.... வாக்கு சேகரிக்க சென்றபோது அவர்களிடம் எப்பொழுதாவது, “நான் திராவிட இனத்தை சேர்ந்தவன். உங்களிடம் வாக்கு கேட்டு வந்திருக்கிறேன்”, என்று நேர்மையாக ஒரு முறையாவது கூறியிருக்கிறீர்களா?  இந்தத் தேர்தல் வெற்றி, யாரை நோக்கியோ, எதற்காகவோ உங்களை, உங்களது திராவிட இன அடையாள பிரகடனத்தை செய்யவைத்திருந்தாலும்... நாங்கள் தமிழர்கள் என்று நம்பிக்கொண்டிருக்கும் பெரும்பான்மையான  மக்களிடமிருந்து நீங்கள் அந்நியப்பட்டு நிற்பதை நீங்கள் இன்னும் உணரவில்லையா? 


எது எப்படியோ... தி.மு.க., இயக்கத்தின் நிறுவனர், உங்களுக்கெல்லாம் தலைவர், முன்னாள் தமிழக முதல்வர் அறிஞர் அண்ணா.... பலரது ஒப்பற்ற உயிர் தியாகங்களையும் மனதில் கொண்டு... விவரம் இல்லாமல்தான் அன்றைய “மெட்ராஸ் ஸ்டேட்” என்றிருந்த நமது மாநிலத்தின் பெயரை ‘தமிழ் நாடு’ என்று மாற்றிவிட்டார் போல. உங்களது தர்க்கத்தின்படி பார்த்தால், அறிஞர் அண்ணா... நமது மாநிலத்திற்கு ‘திராவிட நாடு’ என்றுதானே பெயர் மாற்றியிருக்க வேண்டும்?



 

“நான் தமிழன். நான் தமிழினத்தை சேர்ந்தவன்”, என்று சொல்வதெல்லாம் அவ்வளவு அருவருப்பான கெட்டவார்த்தையா? திராவிட இனத்தைச் சேர்ந்த யாராவது விளக்கம் சொன்னால்... நாங்களும் புரிந்துகொள்கிறோம்.


தற்பொழுது இருக்கின்ற அரசியல் சூழ்நிலையில் உங்களது திராவிட பிரகடனமும், நீங்கள் திராவிடராக இருப்பதும்தான் சரியென்றால்... உங்களது நம்பிக்கையில், உரிமையில் தலையிட எங்களைப் போன்றவர்களுக்கு எந்தவித தார்மீக நியாயமும் கிடையாது. ஆனால் தமிழகத்தின் முதல்வராக இருக்கும் உங்களிடம் ஒரு சாமானிய தமிழராக விண்ணப்பிக்க வேண்டிய கோரிக்கைகள் நிறைய இருக்கிறது.

 

தமிழகத்தில் தமிழர்கள் தங்களது  வாழ்வாதாரங்களை – இயற்கை, பொருளாதாரம், அரசியல், வேலைவாய்பு என்று எல்லா வகையிலும், எல்லாத் திசைகளிலும் அடியோடு இழந்துகொண்டிருக்கிற நேரமிது. இந்த இக்கட்டான நேரத்தில்தான்  தமிழக முதல்வராக உங்களது செயல்பாடு தலையாய உயிர்மீட்பு பணியாக இருக்க வேண்டும். தமிழகத்தின் மக்கள் பிரதிநிதியாக இன்றைய சட்டமன்றத்திற்கும், பாராளுமன்றத்திற்கும் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கும் உறுப்பினர்களில் எத்தனை பேர் தத்தமது வீட்டில் தமிழல்லாத மொழியை தாய் மொழியாக பேசிக்கொன்டிருக்கிறார்கள் என்கிற புள்ளிவிவரத்தை நீங்களும் தெரிந்துகொண்டு செய்தியாகவும் வெளியிட்டீர்கள் என்றால், நமது அண்டை மாநிலங்களான... உங்களது மொழியில் திராவிட  மாநிலங்களின் அரசியல் நிலையோடு ஒப்பிட்டு, தமிழகத்தில் இன்றைய தமிழர்களின் அரசியல், அதிகார நிலை என்னவென்பதை முழுமையாக புரிந்துகொள்ள முடியும்.

 

காலங்காலமாக ஆட்சிக் கட்டிலில் ஏறுகின்ற கட்சியும், முதல்வரும் தமிழ் மொழிக்கும், மண்ணிற்கும், கலாச்சாரத்திற்கும், இனத்திற்கும் எந்தவித கேடுகளையும் செய்ய மாட்டார்கள் என்று இதுவரை நம்பி... நம்பி ஏமாந்த பெருங்கூட்டம் புதிய முதல்வராக பொறுபேற்று இருக்கும் உங்களிடம் பிரதான, முதன்மை கோரிக்கையாக ஒன்றை மட்டும் அழுத்தமாக வைக்க விரும்புகிறது.

 

‘எந்நிலையிலும் நீங்களும் தமிழ் இனத்திற்கு துரோகம் செய்துவிடாதீர்கள். நீங்கள் திராவிடராகவே இருந்துகொள்ளுங்கள். உங்களது திராவிட இன அடையாளத்தை தூக்கிப்பிடிக்க, எம் தமிழினத்திற்கு எவ்வகையிலும் கேடு நினைத்துவிடாதீர்கள்’, என்பதே அது. நான் திராவிடன் என்று சொல்லும் உங்களது அதே சுட்டுரை முகப்புதான் ‘இனித் தமிழகம் வெல்லும்’ என்கிற வாசகத்தையும் தாங்கிப் பிடித்திருக்கிறது. இந்த வாசகத்திற்கு நீங்கள் உண்மையாக நடந்துகொண்டீர்கள் என்றாலே, தமிழின மீட்சி வரலாற்றில் உங்களுக்கு தனித்த ஒரு இடமிருக்கும்.


நேர்மறையாகவே... அவ்வரலாற்றில் இடம் பெறுவீர்கள் என்று நம்புகிறோம்!


-கலியுகச்சித்தர், 

உயிரோசை.

10/05/2021

Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Home Ads

Advertisement

Our Videos

Contact Form

Name

Email *

Message *

seemaan

Facebook

Blog Archive

Recent Posts